Thursday, November 21, 2024
Google search engine
Homeஉலகம்இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் பலி: எதிர் தாக்குதலை தொடங்கிய லெபனான்

இஸ்ரேல் வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவர் பலி: எதிர் தாக்குதலை தொடங்கிய லெபனான்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய நாளில் இருந்து, இஸ்ரேல் மீது லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சூழலில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன.

இதில் 39 பேர் பலியான நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். தொலை தொடர்பு சாதனங்களை ஆயுதமாக பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியது என ஹிஸ்புல்லா அமைப்பு திட்டவட்டமாக கூறியது. மேலும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும்விதமாக இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் லெபனான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை தொடங்கியது.

இந்த நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்று முன்தினம் லெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அதன் ஒருபகுதியாக நள்ளிரவில் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் மீது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த கட்டிடம் தரைமட்டமானது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (வயது 64) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வௌியிட்ட அறிக்கையில், “ஹசன் நஸ்ரல்லா தன் சக தியாகிகளுடன் இணைந்துள்ளார். எதிரிகளுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் புனித போரை ஹிஸ்புல்லா தொடரும்” என சூளுரைத்துள்ளது.

முன்னதாக பெய்ரூட்டில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 6 பேர் பலியானதாவும், 91 பேர் படுகாயம் அடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும் இஸ்ரேலின் வான்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியது.

ஹிஸ்புல்லா அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான ஹசன் நஸ்ரல்லா 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைப்புக்கு தலைமை தாக்கி வந்தார். இவர் ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இஸ்ரேலின் வான்தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது இஸ்ரேலுடன் எல்லை தாண்டிய மோதல்களில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இது மிகபெரிய அடியாக அமைந்துள்ளது.

இதனிடையே நேற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அந்த நாட்டின் கிழக்கு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

இதனிடையே இஸ்ரேலை அழிக்க விரும்பும் மூர்க்கமான எதிரியுடன் போரிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். மேலும் ஹிஸ்புல்லாவை தோற்கடித்து காசாவில் ஹமாஸ் மீது முழுமையான வெற்றி கிடைத்தால் மட்டுமே இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்புவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய பகுதி மீது லெபனான் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. இந்த சூழலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு அமெரிக்கத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments