அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை மெகா ஏலம் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுக்க திட்டங்களை வகுத்து வருகின்றன. மேலும், பயிற்சியாளர் குழுவையும் அதிரடியாக மாற்றி வருகின்றன. அந்தவகையில், மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்க் பவுச்சர் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 முதல் 2022 -ம் ஆண்டு வரை மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் மகிலா ஜெயவர்தனே. அந்த காலக் கட்டத்தில் மும்பை அணிக்காக மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மும்பை அணியின் பயிற்சியாளர் குழுவில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே இணைந்துள்ளார். அவர் லசித் மலிங்காவுடன் இணைந்து பந்துவீச்சு துறையில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.