12 அணிகள் பங்கேற்கும் 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடரின் முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் நவம்பர் 9-ந் தேதி வரை ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நவம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரையும், 3வது கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் மராட்டிய மாநிலம் புனேவில் டிசம்பர் 3ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. அதைத்தொடர்ந்து பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடக்க உள்ளன. ‘பிளே-ஆப்’ சுற்று அட்டவணை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பவன் ஷெராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், பர்தீப் நர்வால் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-29 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
தொடர்ந்து இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான தபாங் டெல்லி, சுனில் குமார் தலைமையிலான யு மும்பாவை (இரவு 9 மணி) சந்திக்க உள்ளது.