அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, லெபனானில் இதுவரை நடந்த தாக்குதலில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 டிரோன்கள் நுழைந்ததாகவும், அதில் 2 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், மற்றொரு டிரோன் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.