இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதில் கே.எல்.ராகுல் 12 ரன், ஜடேஜா 5 ரன், அஸ்வின் 15 ரன், பும்ரா மற்றும் சிராஜ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
ஜஸ்ப்ரீத் பும்ரா 4 பந்துகள் வீசிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 4ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. 5ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.இந்த சூழ்நிலையில் நாளைய 5வது நாளில் பெங்களூருவில் 80% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஒருவேளை நாளை மழை பெய்தால் போட்டி டிராவில் முடியும். இப்போட்டியில் தோல்வியிலிருந்து இந்தியாவை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.