அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதல்களில் தோராயமாக 70 ஹிஸ்புல்லா போராளிகளை அழித்தனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப்படை டெலிகிராமில் தெரிவித்துள்ளது. மேலும், ராக்கெட்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட ஹிஸ்புல்லா ஆயுத களஞ்சியங்களை இஸ்ரேலிய வீரர்கள் அழித்துள்ளனர் என்று இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.