இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதனால், அந்த அமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை படுகொலை செய்து விட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் அமைப்பின் தேசிய உறவுகளுக்கான தலைவராக செயல்பட்டு வந்தவர் இஜ் அல்-தின் கசாப்.
காசாவில் ஹமாஸ் அமைப்பு மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையேயான உறவில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் பிற கூட்டு அமைப்புகளுக்கு ராஜதந்திர மற்றும் ராணுவம் தொடர்புடைய உத்தரவுகளையும் பிறப்பித்தவர்.
காசா முனை பகுதியில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த உயர்மட்ட உறுப்பினர்களில் ஒருவராக அறியப்படுபவர் என தெரிவித்து உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த உத்தரவிடும் அதிகாரம் பெற்றவராக கசாப் இருந்து வந்துள்ளார் என்றும் தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த மாதத்தில் லெபனானை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, 4,400-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்த நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது. இதுதவிர, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன என்றும் 2,500 பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.