நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 147 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் ‘சரண்’ அடைந்ததுடன் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ‘ஒயிட்வாஷ்’ ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா குறைந்தபசம் 3 போடிகளில் ( 5 போட்டிகள் கொண்ட தொடர்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்ஷசனை தட்டி எழுப்பியது போல் இருக்கும் என்று ஆஸ்திரேலிய ஜோஸ் ஹேசல்வுட் வீரர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவில் இந்தியா போராடும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களை எதிர்கொண்டு வீழ்த்த தாங்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் ஹேசல்வுட் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
“அவர்கள் தூங்கும் ராட்ஷசனை எழுப்பிவிட்டனர். 3 – 0 என்ற கணக்கில் வெல்வதை விட 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை பெற்றது நல்லது. அதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்திருக்கலாம். இருப்பினும் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் இங்கே ஏற்கனவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அதைப்பற்றி நான் அதிகம் படிக்க விரும்பவில்லை. இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
இந்தியாவில் 3 – 0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது. உண்மையில் அங்கே ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர். இந்தியா தோல்வியை சந்தித்து இங்கே வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரியதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகராக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் டிவி ரேட்டிங்ஸ் பெரியதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.