ராஜஸ்தான் மாநில உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசின் ‘காயகல்ப்’ திட்டத்தின்கீழ், அரசு கல்லூரிகளின் நுழைவாயிலில் இருக்கும் கதவுகளுக்கு ‘ஆரஞ்சு’ நிறம் பூச வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக, 10 மண்டலங்களில் உள்ள 20 அரசு கல்லூரிகளின் வாசற்கதவுகளுக்கு அடுத்த 7 நாட்களுக்குள் ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்றும், அதனை புகைப்படமாக எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், “கல்லூரியில் சேரும் போதே மாணவர்கள் நேர்மறையாக உணரும் வகையில் கல்லூரிகளின் கல்விச் சூழலும் சூழ்நிலையும் இருக்க வேண்டும். உயர்கல்வி பற்றிய நல்ல செய்தியை சமுதாயத்திற்கு தெரிவிக்க வேண்டும். எனவே, கல்லூரிகளில் நேர்மறையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், இது கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சி என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மாணவர் அணியின் மாநில தலைவர் வினோத் ஜாகர் கூறுகையில், “மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளுக்கு தேவையான கட்டிட வசதிகள் இல்லை, மேசைகள் இல்லை. இந்த நிலையில், மாநில அரசு பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது” என்று விமர்சித்துள்ளார்.