அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்தநிலையில் டிரம்ப் தனது கடந்த அரசாங்க மந்திரியில் இடம் பெற்றிருந்த நிக்கி ஹாலே, மைக் பாம்பியோ ஆகியோருக்கு பதவி வழங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து டிரம்ப் கூறுகையில்,
முன்னாள் தூதர் நிக்கி ஹலே, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரை எனது நிர்வாகத்தில் சேர அழைக்கமாட்டேன். முன்பு அவர்களுடன் பணியாற்றியதை நான் பாராட்டினேன். நமது நாட்டிற்கு அவர்கள் செய்த சேவைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது மந்திரிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றார். இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, கடந்த டிரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, வெளியுறவுத்துறை மந்திரியாக மைக் பாம்பியோ, டொனால்டு டிரம்புக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட வில்லை என தெரியவந்துள்ளது.