இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க்கா வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் அடித்தனர். முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான சாம்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதனையடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் மற்ற பவுலர்களிடம் இருந்து அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 47 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன் விவரம்:
சாம்சன் இந்த வருடம் மட்டும் 4 முறை டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக முறை டக் ஆகிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் விராட், ரோகித் மற்றும் யூசுப் பதான் தலா 3 முறை டக் அவுட் ஆகியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவர்களை முந்தியுள்ள சாம்சன் இந்த மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.