பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருந்தன. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 31.5 ஓவர்களில் 140 ரன்களில் சுருண்டது. பின்னர் 141 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முன்னதாக இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-வது ஒரு நாள் போட்டியில் 141 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றிருந்தது. அதேபோல் 3-வது ஆட்டத்தில் 139 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 100 பந்துகளுக்கு மேல் மீதம் வைத்து பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.