ராமேசுவரத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி 3 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் நடுக்கடலில் சிறைபிடித்து கைது செய்தனர்.
அதோடு 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். 23 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது 23 மீனவர்களையும் வருகிற 25-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 23 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.