ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க் ஆகியவற்றிற்கான இந்தியத் தூதுவராக தற்போது கடமையாற்றி வரும் சந்தோஷ் ஜா இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக கடமையேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவின் பதவிக் காலம் கடந்த டிசெம்பர் 15 ஆம் திகதி நிறைவடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் நியமனம் பெற்றுச் செல்வதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 மே மாதம் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் இந்தியாவின் உயர் மட்ட இராஜதந்திரியாக அவர் பதவி வகித்த காலப்பகுதி இருதரப்பு பங்குடமையில் ஒப்பிட முடியாத பல மைல்கற்களை கண்டிருந்தது.
இந்திய – இலங்கை உறவுகளில் பல்வேறு உயர் சாதனைகளை எட்டுவதிலும் அவர் மிக முக்கியமான வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.
அவரது பதவிக் காலத்தின் போது 2022 இல் இலங்கை பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டிருந்த நிலையில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பன்முக உதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும்.
மேலும் கொவிட் 19 பெருநோய் காலப்பகுதியில் இலங்கைக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களின் விநியோகத்தினை துரிதப்படுத்துவதற்காக இந்திய கடற்படை மற்றும் விமானப்படை கலங்கள் பணிக்கமர்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.