கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
வாட்ஸ்அப் செயலி, புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப் நிர்வாகம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப (டிஜிட்டல் ஊடக நெறிமுறை சட்டம்) விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறது. அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு குடிமக்களுக்கு அளிக்கும் அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறி வருகிறது.
தேச நலனுக்கும், தேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, வாட்ஸ்அப் தனது தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பாவிட்டாலோ, மத்திய அரசுடன் ஒத்துழைக்காவிட்டாலோ அதை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதால், எத்தனையோ இணையதளங்களையும், செல்போன் செயலிகளையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. அதுபோல், வாட்ஸ்அப் இந்தியாவில் செயல்படவும், பயன்படுத்தவும் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.