கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்து வருபவர் தேஜஸ்வி சூர்யா. இவர், ஹாவேரி மாவட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் விவசாயிக்கு சொந்தமான நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்று நோட்டீஸ் அனுப்பிய காரணத்தால் அவர் தற்கொலை செய்திருப்பதாக தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சர்ச்சை கருத்து குறித்து ஹாவேரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் தேஜஸ்வி சூர்யா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது தேஜஸ்வி சூர்யா சார்பில் ஆஜரான வக்கீல், விவசாயியின் தந்தை கூறிய தகவல்கள் அடிப்படையில் மனுதாரர் கருத்து வெளியிட்டு இருந்ததாகவும், பின்னர் அதனை அவர் அழித்து விட்டதாகவும், அதனால் அவர் மீதான வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்குக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.