அரியலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயங்கொண்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பயணிகள் விடுதியில் தங்கினார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் அவர் காலை 10.30 மணியளவில் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி அவர்களை சராசரி ஊட்டச்சத்து நிறையுடையவர்களாக உருவாக்கி தமிழ்நாட்டினை ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாநிலமாக மாற்றும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குகிறார்.
காலை 11.15 மணியளவில் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர் மாவட்டத்தில் 26 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 27 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 456 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதையடுத்து மதியம் 12.50 மணிக்கு பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் சற்று நேரம் அங்கு ஓய்வெடுக்கிறார்.
அதன்பின்னர் மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது அவர், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு 6.55 மணிக்கு சென்று, அங்கிருந்து இரவு 7.55 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்-அமைச்சர் வருகையால் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.