குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென் தமிழகத்தில் இன்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழையும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.