தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலியில் சுமார் 200 மி.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடுமையான மழை தொடரும் என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், உடனடியாக தி.மு.க. அரசு போர்க்கால நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். தென்மாவட்டங்களில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களையும், பேரிடர் மீட்புக் குழுக்களையும் உடனடியாக அனுப்பி மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.
தென்மாவட்ட பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன், கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்ட பா.ஜனதாவினர், மழை நின்ற பிறகு, பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.