காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய குடிமை தற்காப்புப் பிரிவு, அதன் குழுக்களால் அந்தப் பகுதிக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டஜன் கணக்கானோர் காயமடைந்து இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ஊடக தொடர்பு அதிகாரி மொகமத் அபிப் மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா குடியிருப்பு கட்டிடம் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.