திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காந்திசாலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் அல்தாப் தாசிப். இவரது மனைவி சப்ரின் பேகம். மகள் அல்வினா மரியம். அல்தாப் தாசிப் செய்யாறில் தனியார் நிதிநிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு திட்டம், மளிகை சாமான்கள் வழங்கும் திட்டங்களை நடத்தி அதன் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்ததாக திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. அல்தாப் தாசிப் தற்போது கோர்ட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த வசந்தகுமார் அவ்வப்போது அல்தாப் தாசிப் குடும்பத்தினரை கார் மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சப்ரின்பேகம், மற்றும் அவரது மகள் அல்வினா மரியம் ஆகிய இருவரை சென்னையில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு கார் மூலம் அழைத்துச் செல்வதற்காக வந்தார். இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்ற அவர், திடீரென வேலூர் நோக்கி சென்றதோடு அங்கு அவருக்கு தெரிந்த நண்பர்களை வரவழைத்து அவர்கள் மூலம் இருவரையும் சிறை பிடித்துள்ளார்.
அது மட்டுமல்லாது சப்ரின் பேகத்தின் தாயார் ஹயாத்தின் பேகத்தை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு முதலில் ரூ.1 கோடி வரை பணம் கேட்டுள்ளனர். பின்னர் ரூ.50 லட்சம் தருமாறும், முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என கூறி நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால் பதறிப்போன ஹயாத்தின் பேகம் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
தொடர்ந்து தாய் மற்றும் மகளை கடத்தி சென்றவர்களை பணம் தர தயாராக உள்ளதாக கூறி அதனை ராணிப்பேட்டையில் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக, வந்த சிலரை ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கொண்ட கும்பபலை கைது செய்து ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தாய், மகளை போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.