வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தோட்டக்கலை பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அருவியில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளமான கொடைக்கானலில் குணா குகை, பில்லர் ராக், பைன் மரச்சோலை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
அதோடு, அங்குள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அங்கு ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.