குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். தற்போது திருநெல்வேலி. தூத்துக்குடியில் மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த அரசு மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நிவாரண முகாமில் உள்ள மக்களை சந்தித்து பேசி, தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்து உள்ளனர்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அதில் ‘தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துள்ள வரலாறு காணாத கனமழை காரணமாக, வெள்ளம் சூழ்ந்துள்ள முத்தாலம்மன் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை மீட்கின்ற பணிகளை மாண்புமிகு அமைச்சர்கள் – அதிகாரிகள் – அலுவலர்களுடன் இணைந்து இன்று ஒருங்கிணைத்தோம்.
காவல்துறை – தீயணைப்பு படை – கடலோர பாதுகாப்பு குழுமம் – பேரிடர் மீட்பு குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் – அலுவலர்களிடம் வலியுறுத்தினோம்.’
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.