Monday, December 23, 2024
Google search engine
Homeஇந்தியாஅல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: தெலுங்கானா முதல்-மந்திரி கடும் கண்டனம்

அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: தெலுங்கானா முதல்-மந்திரி கடும் கண்டனம்

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் படம் பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர். இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், ரேவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சூழலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கினார். இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் நேற்று வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கும்பலாக திரண்டு வந்து, பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தும், கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த தெலுங்கானா போலீசார், அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மாநில டி.ஜி.பி. மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது. சந்தியா தியேட்டர் சம்பவத்தில் தொடர்பில்லாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என்று அதில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments