தென்காசி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவிக்கரைகள் சேதமடைந்தன. மேலும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ஐந்தருவி, புலியருவியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து முற்றிலும் சீரான நிலையில், குற்றால அருவியில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
அதோடு, குற்றாலத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர். குற்றாலம் பிரதான அருவியில் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.