சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்த வழக்கில், ஞானசேகரனின் கூட்டாளியான திருப்பூரை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவர் இருக்கிறார் என சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டறிந்து உள்ளனர். அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவி தவிர்த்து 4 பேர் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை பெற்று விசாரிக்கவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டு உள்ளது. ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் என 4 பேரை சிறப்பு குழு கண்டறிந்து உள்ளது.
பல ஆபாச வீடியோக்கள் உள்ள நிலையில், சிலரை மட்டும் சிறப்பு குழு கண்டறிந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களை பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்து உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அளித்துள்ள பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில் போலீசார் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.