தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் அவர் உயர்கல்வித்துறை அமைச்சராகதான் பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு, போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில், இந்த வழக்கில் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்த சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன்.
2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய்க்கு, அதாவது வருமானத்தை விட அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்துச் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது.அவர்கள் மீது போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர்களை குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன்.
இந்த வழக்கில் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து அவர்களது கருத்தை கேட்பதற்காக இருவரும் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஏதாவது இடையூறு இருந்தால், காணொலி காட்சி வாயிலாகவும் ஆஜராகலாம்” இவ்வாறு கூறியிருந்தார். அதன்படி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன.