10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமாகி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவை இந்த சீசனுக்காக ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது. ஆனால் கடந்த சீசனில் முழுமையாக 5 போட்டிகள் கூட விளையாடாத அவர் காயத்தை சந்தித்தார். அதன் பின் சில போட்டிகள் கழித்து மீண்டும் விளையாட வந்த அவர் முழுமையாக ஒரு ஓவர் வீசி முடிப்பதற்குள் மீண்டும் காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் விளையாடிய போட்டிகளில் அவர் ஏற்படுத்திய தாக்கம் பலரது மத்தியிலும் பாராட்டை பெற்றது. பின்னர் குணமடைந்து இந்திய அணியில் இடம்பிடித்த அவர் மீண்டும் காயத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.
மயங்க் யாதவ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அகாடமியில் காயத்தில் இருந்து மீளுவதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார். அவர் எப்போது முழு உடல் தகுதியை எட்டுவார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் முதல் பாதி ஆட்டத்தை தவற விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் புதிய கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கும் லக்னோ அணி முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை வருகிற 24-ம் தேதி எதிர்கொள்கிறது.