தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. ரசிகர்கள் இவரை ‘மிஸ்டர் 360’ என்றழைப்பர். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்சர் அடிக்கும் திறமை படைத்தவர். விளையாடிய கால கட்டங்களில் ஏராளமான சாதனைகள் படைத்த இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். அதன் பின் எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை.
இந்நிலையில் டி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்படி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் ‘லெஜண்ட்ஸ் லீக்’ டி20 தொடரில் களமிறங்க முடிவு செய்தார். அதன்படி டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டைட்டன்ஸ் அணி தரப்பில் களமிறங்கிய டி வில்லியர்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரளவைத்தார். வெறும் சிக்சர்கள் மட்டுமே அடிப்பதில் கவனம் செலுத்திய அவர் 28 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 15 சிக்சர்கள் அடங்கும்.
இதன் மூலம் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய புல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் அடித்திருந்தபோது போட்டி மழையால் தடைப்பட்டது. டக்வொர்த் முறைப்படி டைட்டன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.