சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் உட்புகுதல், தீயணைப்பு, பேரிடர் போன்ற அவசர காலங்களில் எப்படி செயல்படுவது? என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் விமான நிலைய அதிரடிப்படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, சென்னை மாநகர போலீஸ் அதிரடி படையினர், விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு படை, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், மருத்துவக் குழு இணைந்து சென்னை விமான நிலைய ஓடுபாதை அருகே ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அவசரமாக அணைத்தனர். கீழே விழுந்து கிடந்த சிலரை மருத்துவ குழுவினர், அவசர அவசரமாக தூக்கி வந்து முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகளுடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். இந்த திடீர் பாதுகாப்பு ஒத்திகையை தத்ரூபமாக நடத்தினர்.இது திடீரென நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகை என்பது விமான நிலையத்தில் உள்ள பலருக்கு தெரியாததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.