அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக தென் இந்திய அறிவியல் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இது நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலங்களும் மாநில அளவில் இதற்கான கண்காட்சியை நடத்தியதில் அதில் வெற்றி பெறுபவர்களை இந்த தென் இந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற செய்ய வேண்டும். அந்தவகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் தனிப்பட்ட, குழு, ஆசிரியர் வகைகள் என 3 வகைகளில் இந்த கண்காட்சியை ஆந்திர மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நடத்த உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட அளவில் இந்த கண்காட்சியை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களை, அடுத்தகட்டமாக ஜனவரி மாதம் 6-ந்தேதி நடத்தப்படும் மாநில அளவிலான கண்காட்சியில் இடம்பெற செய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.