ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்சை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் தோனி மற்றொரு சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு பங்கேற்றினார். இந்த போட்டியில் தோனி ஆட்டநாயகராக அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதுபெற்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். 43 ஆண்டுகள் 281 நாட்கள் வயதான தோனி ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
இதற்குமுன்பாக அதிக வயதில் ஆட்டநாயகன் விருதுபெற்றவராக பிரவீன் தாம்பே இருந்தார். 43 ஆண்டுகள் 60 நாட்கள் வயதில் பிரவீன் தாம்பே ஆட்டநாயகன் விருதுபெற்றதே அதிக வயதான வீரர் ஆட்டநாயகன் விருது பெற்றதாக இருந்தது. அவருக்கு அடுத்தபடியாக ஷேன் வார்னே (41 ஆண்டுகள் 223 நாட்கள்) வயதிலும், ஆடம் கில்கிறிஸ் (41 ஆண்டுகள் 181 நாட்கள்) வயதிலும், கிறிஸ் கெயில் (41 ஆண்டுகள் 35 நாட்கள்) வயதிலும் ஆட்டநாயகன் விருது பெற்றவர்களாக இருந்தனர். தற்போது, நேற்றைய ஆட்டநாயகன் விருது மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் ஆட்டநாயக விருதுபெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை தோனி படைத்துள்ளார்.