நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தே.மு.தி.க தலைமை அலுவலகம் இன்று தெரிவித்தது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது.
விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். இதனால், விஜயகாந்தின் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.