மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றுள்ளார் மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் ரஷியா இந்தியா இடையிலான ஒத்துழைப்பு, வடக்கு தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு மத்திய மந்திரி ஜெய்சங்கர் செர்கே லாவ்ரோவ் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய செர்கே லாவ்ரோவ்,
இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவம் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டோம். நவீன ஆயுத கூட்டு தயாரிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினோம். ராணுவம் மற்றும் ராணுவம் சார்ந்த தொழில்நுட்ப திறனில் இந்தியாவின் திறன் மீது எங்களுக்கு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி திட்டத்தின் கீழ் இந்தியாவின் ராணுவ உற்பத்திக்கு ஆதரவு அளிக்கிறோம். இது செயற்கைத்தனமின்றி உருவான நம்பிக்கை. இதில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கத் தயார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்திய விருப்பத்தை ரஷியா ஆதரிக்கிறது என்றார்.
மேலும் ரஷிய தொழில், வர்த்தகத் துறை மந்திரியுமான டெனிஸ் மாந்த்ரோவையும் சந்தித்து பொருளாதார ஈடுபாடு குறித்த விஷயங்கள் பற்றியும் பேசுகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மந்திரி ஜெய்சங்கர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் செல்ல உள்ளார் என்று தகவல்கள் தெரிய வருகிறது.