2024-ம் ஆண்டு நேற்று பிறந்ததையொட்டி சுற்றுலாத்தலங்களில் ஏராளமான பயணிகள் குவிந்தனர். வழிபாட்டுத்தலங்களிலும் பக்தர்கள் திரண்டனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர். அங்கு அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடியபின்பு பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பழனி முருகன் கோவிலிலும் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதேபோல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலிலும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பயணிகள் குவிந்தனர். நள்ளிரவில் சாலையில் ஆட்டம் போட்டவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர ஊட்டியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் புத்தாண்டின் முதல் சூரியோதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.