பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அப்போது உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறைந்தபட்சமாக 4.0 ரிக்டர் புள்ளிகளில் இருந்து அதிகபட்சமாக 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின.இதனால் ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின. இதைப்போல தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதுடன், அவற்றில் விரிசல்களும் ஏற்பட்டன. சாலைகள், வீதிகள் இரண்டாக பிளந்தன.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் 33,500-க்கு மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த பேரிடரால் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.