கனடாவில் கோவிட் வைரஸ் திரிபான ஜே1 திரிபு கூடுதலாக தாக்கம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்டின் ஜே1 திரிபு அதிகளவு பரவி வருவதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பதிவாகியுள்ள கோவிட் தொற்று உறுதியாளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் ஜே1 திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என பொதுச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
கனடாவில், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி ஜே1 திரிபு முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. இந்த ஜே1 உப திரிபு பரவுகையின் வீரியம் மேலும் பல உப திரிபுகளை பரவச் செய்யும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜே1 திரிபு உலகில் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வரும் கோவிட் திரிபுகளில் ஒன்று என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
எனினும், கனடாவில் இதுவரையில் இந்த திரிபு காரணமாக நோயாளர்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.