ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அம்மன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). இவருடைய மனைவி கனிமொழி என்கிற காந்திமதி. ஈஸ்வரன் கவுந்தப்பாடி அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிக்கோவிலை அடுத்த நசியனூர் பிரிவு பகுதிகளில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு கார்த்தி என்ற (27) ஒரு மகன் உள்ளார். அவர் அசாம் மாநிலத்தில் பைலட்டாக வேலை பார்த்து வருகிறார். அம்மன் கோவில் பகுதியில் கோவில் திருவிழா நடப்பதால் கனிமொழியின் தாயும் வெளியூரில் இருந்து வந்து மகளுடன் தங்கியிருந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் ஈஸ்வரன் பெட்ரோல் பங்குக்கு சென்றார். பின்னர் வேலைகளை முடித்து விட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு கணவன்-மனைவி இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கார்த்தி பெற்றோரிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இருவருமே போனை எடுக்கவில்லை. இதனால் வீட்டின் அருகே உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் கனிமொழியின் தாயுடன் சேர்ந்து பார்த்தனர். கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு படுக்கை அறையில் கனிமொழி ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், சமையலறையில் ஈஸ்வரன் கழுத்தில் ரத்தம் வழிந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து அவர்கள் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர், கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். நள்ளிரவு வீட்டுக்கு வந்த ஈஸ்வரன் தூங்காமல் இருந்துள்ளார். பின்னர் திடீரென எழுந்து தூங்கிக்கொண்டு இருந்த மனைவி கனிமொழியை வீட்டில் இருந்த சுத்தியலால் நெற்றி பகுதியில் அடித்துள்ளார். இதனால் ரத்தம் வழிய அதே இடத்தில் கனிமொழி இறந்துவிட்டார். அதன்பின்னர் சமையல் அறைக்கு சென்ற ஈஸ்வரன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து சமையல் அறையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். ஆனால் உயிர் போகவில்லை. இதனால் ரத்தம் வழிய வழிய ஜன்னலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈஸ்வரனுக்கு கடன் தொல்லை இருந்ததா? அல்லது குடும்பத்தகராறா? என்று தெரியவில்லை. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் மனைவியை அடித்துக்கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.