தொழிற்சாலை ஒன்றில் நிலத்தடி இரசாயன தொட்டியொன்று சேதமடைந்ததால் வெளியேறிய புகை காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகமவில் உள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்த இரசாயன தொட்டியிலிருந்தே இன்று (08) காலை முதல் இவ்வாறு புகை வெளியேறி வருகின்றது.
இதன் காரணமாக தொழிற்சாலைக்கு செல்லும் வீதிகளையும் பொலிஸார் மூடியுள்ளனர். மேலும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி சேவைகளும் தயார் நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிற்சாலையில் உள்ள நிலத்தடி தொட்டியில் ஏற்பட்ட சேதம் காரணமாக வெளியான வாயுவால் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையின் விளைவாக இந்த வாயு உற்பத்தியாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
புகை பரவத் தொடங்கியதையடுத்து, அப்பகுதி மக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், முகக்கவசம் அணியுமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், நிலைமையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.