அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, கர்பி அங்லோங் மாவட்டத்தில் ரூ.168 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.
இதன்பின்னர் திபு நகரில் அரோன்பரிம் சிங்ரிம் ஆம்பெய்பி பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, 500 ஆண்டுகளுக்கு பிறகு நாம் சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.
அதனால், ஜனவரி 22-ந்தேதிக்கு முன் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சில நாட்கள், கடவுளுடன் செலவிடுவதில் கெட்ட விசயம் எதுவும் இல்லை என கூறினார்.
சமீபத்தில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல், கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி எதுவும் தெரிவிக்க அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
எனினும், ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் புனிதம் வாய்ந்த நேரத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இருவரும் கடவுளுடன் தங்களை இணைத்து கொண்டால், அது அனைவருக்கும் நன்றாக இருக்கும் என கூறினார்.
இதுபற்றி பிஸ்வா கூறும்போது, பத்ருதீன் அஜ்மல் கூறியது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. ஜனவரி 22-ந்தேதிக்கு 2 நாட்கள் முன்னும், 2 நாட்கள் பின்னும் மிக புனிதம் வாய்ந்த நேரம் ஆகும். மக மாதமும் தொடங்க உள்ளது. ராமர் கோவிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த நாட்கள் மிகவும் புனிதம் வாய்ந்தவை. அதனால், இந்த காலகட்டத்தில் கடவுளுடன் நம்மை அதிக அளவில் இணைத்து கொள்ள முடியுமென்றால், அது நமக்கு சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாமில் பார்பெட்டா நகரில், கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பத்ருதீன் அஜ்மல் பேசும்போது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜனவரி 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முஸ்லிம்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும்.
ராமஜென்ம பூமியில் நிறுவப்படும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும். லட்சக்கணக்கான மக்கள் பஸ்களிலும், ரெயில்களிலும், விமானங்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பயணம் மேற்கொள்வார்கள்.
நாம் அமைதி காக்க வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என கூறினார். இந்த காலகட்டத்தில், நாம் பயணம் செய்யாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.