பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். ‘துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது.
கொரோனா காரணமாக 2019-ம் ஆண்டுக்குப்பிறகு இந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது வருகிற 10 முதல் 12-ந்தேதி வரை மீண்டும் இந்த மாநாடு நடக்கிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் குஜராத் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்திற்கு வந்தடைந்தார். பிரதமர் மோடியை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு சர்வதேச தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்.
தொடர்ந்து பல்வேறு முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார். பின்னர் பிற்பகல் 3 மணியளவில் துடிப்பான குஜராத் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து நாளை ( 10-ந்தேதி) காலை 9.45 மணிக்கு காந்திநகர் மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்துகிறார். மாலை 5.15 மணியளவில் கிப்ட் நகரில் நடைபெறும் சர்வதேச பின்டெக் தலைமைத்துவ மன்றத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
‘எதிர்காலத்துக்கான நுழைவாயில்’ என்ற பெயரில் நடைபெறும் குஜராத் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் 20 ஆண்டு வெற்றி கொண்டாட்டமாகவும் இந்த மாநாடு நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான உச்சி மாநாட்டில் 34 நாடுகள் மற்றும் 16 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தொழில்துறை 4.0, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள், நிலையான உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், மின்சார இயக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய மாற்றம் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் இதில் இடம்பெறுகின்றன.
இதைப்போல அங்கு அமைக்கப்பட்டிருக்கும் வர்த்தக கண்காட்சியில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சர்வதேச தரத்திலான படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு அமைப்பு தற்போது வணிக ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மை ஆகியவற்றுக்கான மிகவும் புகழ்பெற்ற சர்வதேச மன்றங்களில் ஒன்றாக உருவாகியுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.