சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்தும் வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார். இதைத்தொடர்ந்து மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார்.
இந்நிலையில், நடிகர் பாலா தற்போது மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. அனைவராலும் அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை. அதனால் தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம்.
இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அனகாபுதூர், பம்மல், பல்லாவரம் போன்ற இடங்களை சுற்றியுள்ள மக்கள் மருத்துவத்திற்காக இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை பார்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு ஆட்டோ வழங்குவேன். இந்த ஆட்டோ ஒட்டுனரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் என் சொந்த செலவில் வழங்கப்படும்” என்று கூறினார்.