இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல், பரத் உடன் 3வது விக்கெட் கீப்பராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரரான துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வானது குறித்தும் தனது கடந்த கால நிகழ்வுகளையும் இளம் வீரர் துருவ் ஜூரல் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நான் ராணுவப் பள்ளியில் படித்தேன். விடுமுறை நாட்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேர வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான படிவத்தை நிரப்பினேன். ஆனால் இது குறித்து என் அப்பாவிடம் சொல்லவில்லை. அவருக்குத் இது தெரிந்ததும், அவர் என்னைத் திட்டினார்.
ஆனால், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்க ரூ.800 கடன் வாங்கினார். எனக்கு கிரிக்கெட் கிட் வேண்டும் என்று சொன்னபோது, அப்பா என்னிடம் அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார். ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை செலவாகும் என்று சொன்னேன். இதை கேட்டதும் என் அப்பா விளையாடுவதை நிறுத்தச் சொன்னார்.
ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். குளியலறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். பின்னர் என் அம்மா தனது தங்கச் சங்கிலியை விற்று எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தந்தார். இந்நிலையில் நான் இந்திய அணிக்குத் தேர்வானேன் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நான் இதை என் குடும்பத்திடம் சொன்னேன். அப்போது அவர்கள் என்னிடம் எந்த இந்திய அணிக்காகவா தேர்வாகி உள்ளாய்? என கேட்டார்கள்.
நான் அவர்களிடம் ரோகித், விராட் ஆடும் இந்திய அணியைச் சொன்னேன். இதைக் கேட்டதும் எனது ஒட்டுமொத்த குடும்பமும் உணர்ச்சிவசப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.