வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு (13) தங்காலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரகெட்டியார கிழக்கில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் மொரகெட்டியார கிழக்கு – நகுலோகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத போது, குறித்த நபர் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். பெண் தண்ணீர் கொடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்ற போது, பின்னால் சென்ற அவர், பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது, பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியுள்ளார்.
பின்னர், அவர் தரையில் விழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.