ஈராக் நாட்டின் எர்பில் நகரில் அமெரிக்க தூதரகம் அமைந்த பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு, ஈரான் நாட்டின் புரட்சி காவல் படை பொறுப்பேற்றுள்ளது. இதுபற்றி படையினர் வெளியிட்ட செய்தியில், உளவாளிகளின் தலைமையகம் மற்றும் ஈரானுக்கு எதிரான பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு, ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தது.
இதுபற்றி ஈரான் பாதுகாப்பு படை வட்டாரம் வெளியிட்ட செய்தியில், எர்பில் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் கூட்டணி படைகளிலோ அல்லது அமெரிக்க படைகளிலோ வீரர் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளது.
ஈராக்கின் எர்பில் விமான நிலையம் அருகே 3 ஆளில்லா விமானங்களை கூட்டணி படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால், அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க தூதரகத்திற்கு அருகே 8 இடங்களை இலக்காக கொண்டு நடத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.