பிரிட்டனின் பக்கிங்காம்ஷைர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தவர் கேண்டிஸ் பார்பர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் தன்னிடம் படித்த 15 வயது மாணவனுக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியும், ஆபாசமான வார்த்தைகள் கொண்ட மெசேஜ் அனுப்பியும் ஆசையை தூண்டி மயக்கியிருக்கிறார். பின்னர் அந்த மாணவனை தனியாக வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அவனுடன் உடலுறவு கொண்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவனை மயக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு 6 ஆண்டுகள், 2 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஆசிரியை கேண்டிஸ் பார்பர் மீதான புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, கேண்டிஸ் பார்பர் காலவரையின்றி ஆசிரியர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
“கேண்டிஸ் பார்பரின் நடத்தை மிகவும் மோசமானதாகவும் சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் இருந்தது. எதிர்காலத்தில் அவர் எந்த கல்வி நிறுவனத்திலும் வேலை பார்க்க தகுதியற்றவர்” என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.