ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. இதில் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 10 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் மற்ற ஆட்டங்களில் சிட்சிபாஸ், சின்னர், அலெக்ஸ் டி மினார் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்கள் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் நுழைந்த பிரன்டா புருவிர்தோவாவை (செக்குடியரசு) விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான கோகோ காப் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கரோலின் டோலிஹிட்டை வீழ்த்தினார்.
நேற்று நடைபெற்ற போட்டிகளில் சில அதிர்ச்சி தோல்விகளும் அரங்கேறின. முன்னணி வீரங்கனைகளான ஆன்ஸ் ஜபேர் (துனிசியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) மற்றும் மரியா சக்காரியா (கிரீஸ்) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர்.