கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது அதன்பின்னர் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா ‘தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது’ என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவர் தான் ராஷ்மிகாவின் டீஃப் பேக் ( Deep Fake) வீடியோவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.