தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசிற்கு நடிகர் சவுந்தர ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மாலை மலருக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், “மனித நேயம் உள்ள ஒரு மாமனிதன். மக்கள் மனதில் இடம் பிடித்த ‘கேப்டன்’ விஜயகாந்திற்காக அவரின் சொந்த ஊரான மதுரையில் ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும்.
அவரின் மக்கள் பணி, படங்கள் எல்லாவற்றையும் ஒரு டிஜிட்டல் நூலகமாக வைத்து வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்படி இந்த மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தமிழ அரசிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். விஜயகாந்தை பார்த்து பல கோடி இளைஞர்கள் வாழ்க்கையில் சாதித்திருக்கிறார்கள். இனியும் அவருடைய வாழ்க்கையை பார்த்து சாதிக்க வேண்டிய இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள் அதற்காக இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.