குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். இதுதவிர மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்குப்பேரவையில் முன்னாள் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருடைய மனைவி ஜெமிலா (40). இவர் மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
மைலோடு ஆலய பாதிரியாராக இருப்பவர் ராபின்சன். இவர் பங்குப்பேரவை தலைவரும் ஆவார். தற்போதுள்ள பங்கு பேரவை தரப்பினருக்கும், ஏற்கனவே பங்கு பேரவை நிர்வாகியாக இருந்த சேவியர் குமார் தரப்புக்கும் இடையே நிர்வாக ரீதியாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இரணியல் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். மேலும் பங்கு பேரவை நிர்வாக கணக்கு, வழக்குகள் தொடர்பாக சேவியர்குமார் அடிக்கடி கேட்பது வழக்கம். இந்த பிரச்சினை தொடர்பாக வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அவர் தற்போதைய பங்கு பேரவை நிர்வாகத்துக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே சேவியர் குமாரின் மனைவி ஜெமிலாவை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. எனினும் ஜெமிலா மீண்டும் பணியில் சேர முயற்சி மேற்கொண்டார். இதனால் நேற்று முன்தினம் இரவு ஜெமிலா தனது உறவினர்கள் சிலருடன் பாதிரியார் ராபின்சனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது தனது கணவர் இனி இதுபோன்று சமூக வலைத்தளங்களில் எதுவும் பதிவிட மாட்டார் என்றும், மன்னிப்பு வழங்கி ஆசிரியர் பணி மீண்டும் வழங்கும்படி கூறியுள்ளார். அதற்கு ராபின்சன், சேவியர்குமார் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் வேலை வழங்குவதாக கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் சேவியர்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மைலோடைச் சேர்ந்த வின்சென்ட், பாதிரியாரிடம் எழுத்து பூர்வமாக மன்னிப்பு கேட்டால் மனைவிக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து சேவியர்குமார் மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அங்கு பாதிரியார் ராபின்சன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இதில் தற்போதைய பங்குப்பேரவை நிர்வாகிகள் சிலரும், தி.மு.க. நிர்வாகி ஒருவரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் சேவியர்குமார் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக ஜெமிலாவுக்கு தகவல் கிடைத்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களுடன் பதற்றத்துடன் ஓடி வந்தார். பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சேவியர் குமார் உடலை கண்டு கதறி அழுதார்.
பாதிரியார் இல்லத்தில் சேவியர் குமார் பிணமாக கிடந்த சம்பவம் அங்கு காட்டுத் தீயாய் பரவியது. சேவியர்குமாரின் உறவினர்களும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதற்கிடையே குளச்சல் உதவி சூப்பிரண்டு பிரவீன் கவுதம், தக்கலை துணை சூப்பிரண்டு உதயசூரியன், இரணியல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள், தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், இரணியல் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது இஸ்திரி பெட்டியால் தலையில் அடித்து சேவியர் குமார் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த அறையில் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்ததால் பேச்சுவார்த்தையின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இந்த மோதலில் சேவியர் குமார் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே பேச்சுவார்தையில் ஈடுபட்ட பாதிரியார், தி.மு.க. நிர்வாகி, பங்கு பேரவை நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சேவியர்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேவியர்குமார் உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தால் தான் உடலை எடுக்க விடுவோம் எனக்கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு மேலும் பதற்றம் உருவானது. இரவு 12.30 மணி வரையும் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியும் பலப்படுத்தப்பட்டது. இந்த கொலை சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.